இந்தப் பிரபஞ்சம் பெரும்பாலும் வெறுமையானதுதான். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன், அண்ணளவாக 40 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. நாம் தற்போது வைத்திருக்கும் மிக வேகமாகச் செல்லக்கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கு செல்லவேண்டுமென்றாலும் கிட்டத்தட்ட 80,000 வருடங்கள் எடுக்கும். ஆகவே தொலைவில் இருக்கும் விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகள் என்பவற்றை அடைய பல மில்லியன் வருடங்கள் எடுக்கும்.
ஆகவே தொலைவில் இருக்கும் விண்வெளிப் பொருட்களை அங்கு சென்று பார்த்து ஆராய்வது என்பது முடியாத காரியமாகும். அப்படியென்றால் எப்படி நாம் விண்மீன்களை ஆய்வுசெய்வது?
தொலைநோக்கிகளைப் பயன்படுத்தித்தான்! தொலைவில் உள்ள விண்வெளிப் பொருட்களை ஆய்வு செய்ய நாம் வைத்திருக்கும் ஒரே கருவி தொலைநோக்கிகள் தான்.
ஆனால் சில விண்வெளிஆய்வுகளைச் செய்ய பல மாதங்கள் வானை அவதானிக்க வேண்டி வரும். ஒரே இடத்தில் இருந்துகொண்டு தினமும் தொலைநோக்கியில் ஒரே இடத்தை பல மாதங்களுக்கு அவதானிக்கவேண்டும் என்றால் வாழ்க்கையே சலித்துவிடும் அல்லவா, அதனால் தான் LCOGT விஞ்ஞானிகள் புதிய ஐடியா ஒன்றை உருவாக்கியுள்ளனர் – ரோபோ தொலைநோக்கிகள்!
ரோபோ என்பது கணனிகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இயந்திரமாகும். மனித ஈடுபாடு இன்றி, ரோபோக்களை பல்வேறு வேலைகளைச் செய்ய நாம் பழக்க முடியும். அதாவது நடனமாட, நிலத்தை சுத்தம் செய்ய மற்றும் தொலைநோக்கிகளைக் கட்டுப்படுத்த! மிக நீண்ட காலம் எடுக்கும் வானியல் அவதானிப்புகளுக்குச் சரியான கருவி இந்த ரோபோ தொலைநோக்கிகள்தான்!
Las Cumbres Observatory (LCOGT) என்பது ஆறு வேறுபட்ட நாடுகளில் காணப்படும் ரோபோ தொலைநோக்கிகளைக் கொண்ட ஒரு ஆய்வகமாகும். இந்த ரோபோ தொலைநோக்கி குழுக்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் பல்வேறு “செயற்படு” விண்மீன் பேரடைகளை (active galaxies) ஆய்வுசெய்கின்றனர்.
செயற்படு விண்மீன் பேரடைகள் மிகவும் பிரகாசமானவை. அதில் இருந்துவரும் ஒளி அங்கிருக்கும் பில்லியன் கணக்கான விண்மீன்களில் இருந்து மட்டும் வருவதில்லை; மாறாக அந்த விண்மீன் பேரடைகளின் மையத்தில் இருக்கும் மிகப்பாரிய கருந்துளையில் (supermassive black hole) இருந்தும் வருகிறது.
ரோபோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி Arp 151 என்கிற செயற்படு விண்மீன் பேரடையை தொடர்ந்து 200 நாட்களுக்கு விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். அதன் விளைவாக அவர்கள் கண்டறிந்தது மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த விஞ்ஞானிகள் மிகவும் சிக்கலான ஒரு விடயத்தைக் கண்டறிந்துள்ளனர் – அதாவது கருந்துளையின் நிறையை அளந்துள்ளனர்.
Arp 151 என்னும் விண்மீன் பேரடையின் மையத்தில் இருக்கும் கருந்துளையாகிய அரக்கனின் திணிவு சூரியனின் திணிவைப் போல 6 மில்லியன் மடங்குக்கு குறையாமல் இருக்கும் என இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆர்வக்குறிப்பு
ரோபோட் (robot) என்னும் சொல், செக் சொல்லாகிய “robota” என்னும் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு “கடினமான வேலை அல்லது உழைப்பு” எனப் பொருள். இன்று பெரும்பாலும் ரோபோக்கள், மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைக்கோ, அல்லது மனிதர்கள் செய்ய ஆபத்தான வேலைக்கோ பயன்படுகின்றன. உதாரணமாக, வெடிகுண்டு வைக்கப்பட்ட கட்டடத்தினுள் செல்லவும், வேறு கோள்களை ஆய்வுசெய்யவும் இவற்றை நாம் பயன்படுத்துகின்றோம்.
Share: