மேகங்கள் இல்லாத இரவில் வெளியில் சென்றால், நீங்கள் ஐந்து கோள்கள் வரை தொலைநோக்கியின் உதவியின்றி பார்க்கமுடியும். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவை வெறும் கண்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கும்.
இந்தக் கோள்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் தொலைநோக்கி கண்டுபிடிக்கும் வரை சனியின் வளையங்களை யாருமே பார்த்திருக்கவில்லை.
ஆனாலும் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டு 400 வருடங்களுக்கு பின்னரே வொயேஜர் விண்கலம் 1980 களில் சனிக்கு அருகில் சென்றபோது அதன் வளையங்களை தெளிவாக படம்பிடித்தது. அந்தப் படங்களில் இருந்து சனியின் வளையங்கள் பல்வேறு பெரிய வளையங்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வளையங்கள் பில்லியன் கணக்கான மண்ணளவு தொடக்கம் மலையளவு உள்ள பனி மற்றும் பாறையால் ஆன துணிக்கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்று எமக்குத் தெரியவந்தது.
இன்று எமக்கு சனியின் வளையங்கள், பல வளையங்கள் சேர்ந்து உருவானவை என்றும், இந்த வளையங்களுக்கு இடையில் ‘டிவிசன்’ எனப்படும் இடைவெளிகள் காணப்படுகின்றன என்றும் தெரியும். ஆனாலும் சனியின் வளையங்கள் பற்றிய எமது அறிவு இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. அண்மையில் சனியின் வளையங்களின் பிரகாசம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை ஒரு ஆய்வுக்குழு ஒன்று துளியமாக கணக்கிட்டுள்ளனர்.
இவர்கள் சனியின் ஒரு வளையம் தனக்கு அருகில் இருக்கும் வளையங்களைவிடப் மிகப்பிரகாசமாக இருப்பதை அவதானித்துள்ளனர். இதற்குக் காரணம் அருகில் இருக்கும் வளையங்களை விட இந்த வளையம் சற்றே வெப்பநிலை அதிகம் கொண்டதாக இருப்பதனாலாகும். அதே போல விசித்திரமாக ‘கசினி டிவிசன்’ எனப்படும் இடைவெளியும் கூட வெப்பவியல் படங்களில் (thermal imaging) பிரகாசமாக தெரிகின்றன. இதன் மூலம் இது வெறும் இடைவெளி இல்லை என்று எமக்குத் தெரியவருகிறது.
இந்தப் பிரதேசங்கள் வெப்பநிலை அதிகம் கொண்டதாக இருப்பதற்குக் காரணம், ஒப்பீட்டளவில் இந்தப் பகுதிகளில் துணிக்கைகள் குறைவாக இருப்பதனால் சூரிய ஒளியால் இந்தப் பிரதேசங்களை இலகுவாக வெப்பப்படுத்தக்கூடியதாக இருப்பதனாலாகும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் இந்தப் பிரதேசத்தில் இருக்கும் துணிக்கைகள் அதிகம் கருமைநிறமாக இருப்பதால் அவற்றால் அதிகளவு வெப்பத்தை உறுஞ்சிக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
வெறும் புகைப்படங்களில் கசினி டிவிசன் தெரிவதில்லை. இதற்கு அருகில் இருக்கும் வளையங்களில் அதிகளவான துணிக்கைகள் இருப்பதால் அவற்றால் சூரியஒளியை அதிகளவாக தெறிப்படையச் செய்யமுடியும் ஆகவே அவை பிரகாசமாக தெரிகின்றன.

ஆர்வக்குறிப்பு
சனியின் வளையங்கள் உடைந்த வால்வெள்ளிகள், சிறுகோள்கள், மற்றும் சனியின் மேற்பரப்பை அடையமுன்னர் உடைந்துபோன துணைக்கோள்கள் என்பவற்றால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Share:














